பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், பல்வேறு தரப்பினரிடத்திலும் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை நடத்தவேண்டிய கட்டாயம் உள்ளதால் பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும். பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இருமொழி கொள்கைதான் நமது கொள்கை, அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.