அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்பும் நிகழ்ந்து அண்மைக் காலங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிங் ராசையா என்ற 74 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
ஜெய்சிங்கின் மனைவி நீரிழிவு நோயாளி என்பதால் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருக்கும் ஜெய்சிங்கின் மகன் அமேசான் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை Accu Check கருவியை ஆர்டர் செய்வார்.
அவ்வகையில் இந்த முறையும் Accu Check ஆர்டர் போடப்பட்டிருக்கிறது. ஆனால் டெலிவரி ஆன பார்சலை பிரித்து பார்த்த ஜெய்சிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், பார்சலில் இருந்தது சர்க்கரை நோய் அளவை கண்டறியும் கருவிக்கு பதிலாக இரண்டு சாக்லேட்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து அமேசான் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக பதிலளிக்காததால் ஜெய்சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.