கடலூர் மாவட்டம், கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அனுமந்தை சுங்கச்சாவடி அருகே வந்தபோது 5 பேர் அவரது காரை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் மூன்று பேர் மட்டுமே காரில் ஏறிக்கொண்டனர். பிறகு இந்த மூன்று பேரும் காரில் இருந்து இறங்கும்போது திடீரென பிரின்ஸை காரோடு சேர்த்துக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த கும்பல் மரக்காணம் தீர்த்தவாரி சாலை அருகே வந்தபோது, கத்தியை காட்டி மிரட்டி பிரின்ஸிடம் பணம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் அந்த கும்பல் கூகுள் பே மூலம் பணம் அனுப்பும்படி மிரட்டியுள்ளது.
பிறகு பிரின்ஸ் மூன்று பேரின் கூகுள் எண்ணுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் பிரின்ஸ் இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் கூகுள் பே எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சவுபர் சாதிக், அஜீத்குமார், பாலமுருகன், வினோத், சேகர் உள்ளிட்ட ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர். காரில் சென்றவரை மிரட்டி கூகுள் பே மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.