பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் (53). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி இவருடைய வீட்டிற்கு டிப்-டாப் உடையணிந்த 5 பேர் காரில் வந்தனர்.
அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அடையாள அட்டையைக் காட்டி வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலிஸார் வழக்குபதிவு செய்து இதற்கு முக்கிய காரணமாக இருந்த சதீஷ் (36)ஆனந்த் ,(47) ராமசாமி (47), தியாகராஜன் (42) பிரவீன்குமார் ( 36) மோகன்குமார் (30), மணிகண்டன் (37) ஆகிய 7 பேரை கிணத்துக்கடவு போலிஸார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதில் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி வேடம்போட்டு சென்ற முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த மேத்யூ, காரணம்பேட்டை மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பைசல் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்களை தனிப்படை போலிஸார் தேடிவந்த நிலையில் மேத்யூ (60) பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த மேத்யூவை மாஜிஸ்திரேட் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முக்கிய குற்றவாளியான மேத்யூ நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால் கிணத்துக்கடவு போலிஸார் அவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.