2020ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜூன் மாதம் 19ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்தே கொன்ற கொடூரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன் அளித்த சாட்சியம் வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் அடித்து துன்புறுத்தி ஆவணங்களில் பொய்யான தகவலை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்ததாக ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்திருக்கிறார்.
முன்னதாக சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதி தந்தை மகன் இருவரையும் போலிஸார் அடித்தது பற்றி கூறியது முக்கிய சாட்சியமாக இருக்கும் நிலையில் ரவிச்சந்திரனின் இந்த சாட்சியமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு மீதான விசாரணையை 5 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.