மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேசையன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, தி.மு.கழக பொருளாளராக, 10 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக இருந்த பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, மரியாதை செலுத்தி உள்ளோம். இந்த நிகழ்வை தமிழக அரசு பெருமையாக கருதுகிறது.
கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. முந்தைய நாட்களை விட நேற்று கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் தொற்று பாதிப்பு குறையும் எனத் தெரிய வருகிறது.
இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து, கூடுதல் படுக்கை வசதிகள் முதலமைச்சரின் நடவடிக்கை மூலம் ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் இருந்தாலும் 8 ஆயிரம் வரையே நிரம்பியுள்ளன. மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மட்டுமே கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
கேரளாவில் நேற்றைக்குத்தான் பள்ளிகளில் தடுப்பூசி போடத் தொடங்கி உள்ளனர். ஆனால் நாம் முதல் நாளிலேயே தொடங்கி, தகுதியுள்ள 100% பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு விட்டோம்.
காணும் பொங்கலை வெளியில் குடும்பத்துடன் கொண்டாடும் மரபைக் கொண்ட தமிழக மக்கள், நேற்று தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை முறையாக கடைபிடித்து முழு ஊரடங்கு வெற்றிகரமாக அமலாக உறுதுணையாக இருந்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.