சென்னையிலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் காலை 9.45 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் கண்காணித்து பரிசோதித்து அனுப்பினா்.
அப்போது சென்னையை சோ்ந்த 3 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின்பு முரணாக பேசியதையடுத்து 3 பேரின் உடமைகளை சோதனையிட்டனா்.
அவா்களுடையை டிராலி சூட்கேஸ் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் கரண்சி, ஐக்கிய அரபு தினாா், குவைத், பக்ரைன் தினாா், ஓமன் ரியால் போன்ற வெளிநாட்டு பணம் கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினா் கண்டுப்பிடித்தனா்.
3 பயணிகளிடமிருந்து இந்திய மதிப்பிற்கு ரூ.55.29 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா். அதோடு 3 பயணிகளின் துபாய் பயணத்தை ரத்து செய்ததோடு அவா்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினா்.
அவா்களிடமிருந்தது, கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், இவா்கள் 3 பேரும் கடத்தல் குருவிகள் என்றும் தெரிந்தது. எனவே இவா்களிடம் இந்த ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பிய முக்கிய புள்ளி யாா்? என்று தொடா்ந்து விசாரிக்கின்றனா்.