இந்தியாவில் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான செயலிகளை தடை செய்துள்ளது. ஆனாலும், மோசடி செயலிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பெத்தாம்பூச்சிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (33). விசைத்தறி உரிமையாளரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், அவசர தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம்10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து அவர் திருப்பிச் செலுத்திய நிலையில், மோசடி கும்பல் ஒன்று பணம் கேட்டு நூதன முறையில் மிரட்டல் விடுத்து வருகிறது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய கார்த்திக், “'அசான் லோன்' எனும் ஆப் மூலம் கடன் பெற்றால், பத்து நாட்களுக்குள் அதற்கான வட்டியுடன் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதில், 10 ஆயிரம் ரூபாய் பெற்று, ஒரிரு நாட்களில் அதற்கான வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டு மொபைல் ஆப்பை அன் இன்ஸ்டால் செய்துவிட்டேன்.
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி வந்தது. நான் அதை தவிர்த்து வந்த சூழலில், ஆபாச புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வந்தது. எனது மொபைல் காண்டாக்ட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் சிலருக்கும் இதேபோல், ஆபாச படங்கள் அனுப்பப்பட்டது.
எனது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் மொபைல் எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு நூதன முறையில் மன உளைச்சலை ஏற்படுத்தி, பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.