தூத்துக்குடி மாவட்டம், மீனாட்சிபட்டி சாலை அருகே உள்ள ஓடைபாலத்தில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த முதியவர் நாகபத்திரன் என்பது தெரியவந்தது. மேலும் கொம்புகாரன்பொட்டல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்ற வாலிபர்தான் முதியவரை வெட்டி கொலை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து நட்டாத்தி காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த தங்கராஜை போலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
சம்பவத்தன்று முதியவர் நாகபத்திரனிடம், தங்கராஜ் பேசுவதற்காக செல்போன் கேட்டுள்ளார். அதற்கு அவர் செல்போன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் முதியவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை போலிஸார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்கராஜைச் சிறையில் அடைத்தனர்.