சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் விமல்குமார். இவர் கொண்டித்தோப்பில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் விமல்குமார் வீட்டில் இருக்கும் செல்போனை எடுத்து கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் விமல்குமாரை அவரது தாய் கண்டித்து வந்துள்ளார். ஆனால், அவர் செல்போனில் கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் விமல்குமாரின் தாய் செல்போனை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.
இதையடுத்து நேற்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சிறுவன் விமல்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேம் விளையாட செல்போன் தராததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.