சென்னை ராஜிவ்காந்தி சாலையில் உள்ள திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் நடத்திய கொள்ளை நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஜன.,3) காலை வழக்கம் போல் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்கு சென்றபோது அங்கே உள்ளே கயிற்றால் கட்டியபடி ஊழியர் டீக்காராம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக ரயில் நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த போலிஸார் டீக்காராமை மீட்டனர்.
அப்போது முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு வசூலான டிக்கெட் தொகை ரூ.1.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதனையறிந்த போலிஸார் உடனடியாக ரயில் நிலையம் உட்பட அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் எந்த தகவலும் சிக்கவில்லை.
இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் டீக்காராம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சிசிடிவி ஆய்வில் டீக்காராமின் மனைவி சரஸ்வதி ரயில் நிலையம் வந்தது தெரிய வந்திருக்கிறது.
உடனடியாக ஊரப்பாக்கத்தில் உள்ள டீக்காராம் மனைவி சரஸ்வதியிடம் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவர, காவல்துறையினர் 12 மணி நேரத்தில் இருவரையும் கைது செய்து கொள்ளை போன பணத்தையும் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி பேசியதாவது,
கடந்த 10 ஆண்டுகளாக டீக்காராம் ஆன்லைன் ரம்பி விளையாடி வந்ததில் கடன் பிரச்னையில் அவதியுற்றிருக்கிறார். அந்த கடனை அடைப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் டிக்கெட் கட்டண வசூலை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கிறார் டீக்காராம். இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க அவரும் சம்மதிக்கவே நேற்று கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
அதன்படி நேற்று அதிகாலையளவில் ரயில் நிலையத்துக்கு வந்த டீக்காராமும் சரஸ்வதியும் டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை எடுத்து சரஸ்வதியிடம் அளித்திருக்கிறார். எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தன்னை கட்டிப்போடும்படிக் கூறி கதவையும் பூட்டச் செய்திருக்கிறார் டீக்காராம்.
கொள்ளையடித்த பணத்தையும் டீக்காராமின் செல்போனையும் வீட்டு பின்புறம் உள்ள கிணற்றடியில் கவரில் சுற்றி குப்பைக் அடியில் புதைத்து வைத்திருக்கிறார் சரஸ்வதி. சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட காவல்துறையில் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் சிக்கியுள்ளதாக டிஐஜி ஜெயகவுரி கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாக திட்டமிட்டு கொள்ளை நாடகமாடிய தம்பதியினரை சிசிடிவி கேமரா மற்றும் விசாரணையின் மூலம் காவல் துறையினர் கண்டுபிடித்து 12 மணி நேரத்தில் பணத்தை மீட்டுள்ளனர்.