தமிழ்நாடு

“நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளோம்”: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

வேலுார் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கனிம வளங்கள் கடத்தலை தடுத்து நிறுத்தியுள்ளோம்”: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வேலுாரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “வேலுார் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அப்போதுதான், இந்த திட்டத்தில் முறைகேடுகள் செய்தவர்கள் சிக்குவார்கள்.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். மணல் குவாரிகள் விரைவில் திறக்கப்படும். கடந்த ஆட்சியில் கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும்.

அரசு அனுமதியில்லாமல் கடந்த ஆட்சியில் நடந்து வந்த கல் குவாரிகளை எல்லாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். இப்போது அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் மட்டுமே நடந்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வேலுார் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் சாலைகள் சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலுாரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை இனி வாரந்தோறும் ஆய்வு செய்ய உள்ளேன். வேலுார் புதிய பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு தேவைப்பட்டால் தனியார் நிலத்தையும் கையகப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories