ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவைக் கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக மாணிக்கம் தாகூர் எம்.பி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “ ‘ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?’ என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு முழு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அவர் பேசிய பேச்சுக்கள் காரணமாக அமைச்சராக இருந்தவரே ஓடி ஒளியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சட்டத்திற்கு முன்பு வந்து நிற்கத் தைரியம் இல்லாமல் புலி வேஷம் போட்ட பூனையாக இன்று ஒடி ஒளிந்துக் கொண்டிருக்கிறார். தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் சட்டதிற்கு முன்பு நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிறகு நீதிமன்றம் அவருக்கு உரியத் தண்டனை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.