தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் 11 அடி உயர திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து, தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வீரவாள் பரிசளித்தார். பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள குறிப்பேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நடந்து சென்று பெற்றுக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சையில் நாளை நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்துவைத்தேன். அவை வெறும் சிலைகள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் கலங்கரை விளக்கங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.