தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணிகள், கட்சிப் பணிகள் மற்றும் அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்து வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக நடைப்பயிற்சியின் போதும், சைக்கிள் பயிற்சியின் போதும் மக்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். மேலும் தான் உடற்பயிற்சி, சைக்கிள் பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு மக்களும் தவறால் உடற்பயிற்சி செய்யும்படி தூண்டுகிறார்.
அந்தவகையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் தங்களின் வேலைக்கு மத்தியிலும் உடற்பயிற்சி செய்து மக்களை அதேபோன்று செய்யும் படி முதல்வர் கூறிவருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, 2020 சர்வதேச இணைய வழி மாரத்தான் ஓட்டத்தின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் காணொலிக் காட்சியில் சந்திக்கும்போது எல்லாம் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்டால், உடல்நலத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், கொரோனா ஒருவேளை நம்மைத் தாக்கினாலும், அதைத் தாங்கக்கூடிய எதிர்ப்புசக்தி வேண்டும். ஆகவே நடைப்பயிற்சி செய்யுங்கள், நேரம் கிடைக்கும்போது யோகா செய்யுங்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சொல்லிக்கொண்டிருப்பது மட்டுமல்ல; தொடர்ந்து செய்துகொண்டிருப்பவன் நான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். காலையில் ஒருமணி நேரம் ஒதுக்கி, உங்களுக்கு என்ன வசதியிருக்கிறதோ அதைக்கொண்டு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.