முந்தைய நாள் தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போல விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், விருதுநகர் மாவட்டத்தில் பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடும் வயிற்றுவலி காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முந்தைய நாள் தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போல விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த உணவகத்தில் தயாரிக்கப்பட்ட பரோட்டாக்கள் விற்பனையாகாத நிலையில், அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊற வைத்து, சூடேற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, அந்த உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த உணவகத்தில் பழைய பரோட்டாக்களை விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து அந்த உணவக உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, உணவகம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.