கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ச்சியாக இது அதிகரித்தால் மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசு, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் மாநிலத்தில் ஏறக்குறைய 3.5 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பாதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து அதிக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்ட பிதார், ராய்ச்சூர், கலபுர்கி, யாத்கிர், கொப்பல், பல்லாரி மற்றும் விஜயபுரா ஆகிய 7 மாவட்டங்களில் மதிய உணவு திட்டத்தில் வேகவைத்த முட்டைகளை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
இதற்காக கடந்த மாதம் முதல் பல்வேறு நடவடிக்கையை ஆளும் அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு மடங்களைச் சேர்ந்த தலைவர்கள் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.
இந்நிலையில் மதிய உணவில் முட்டை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறிப்பிட்ட மடத்தைச் சேர்ந்த தலைவர்களை அம்மாநில பள்ளி மாணவி ஒருவர் கடுமையாகச் சாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில், “நீங்கள் எங்களுக்கு முட்டை வழங்க அனுமதிக்கவிட்டால், நாங்கள் உங்கள் மடத்திற்கு வந்து முட்டை சாப்பிடுவோம். நீங்கள் சொல்வது நல்லது என நினைக்கிறீர்களா? இதுபோல பாதிப்பு உங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்தால் இப்படித்தான் செய்வீர்களா?
எங்களுக்கு முட்டை மற்றும் வாழைப்பழங்கள் தேவை. அது கிடைக்காவிட்டால் நாங்கள் உங்கள் மடத்துக்கு வந்து அங்கேயே முட்டை சாப்பிடுவோம். அப்படி ஒரு நிலைமை ஏற்படவேண்டுமா? எங்களுடையே பணத்தில் தான் நாங்கள் சாப்பிட கேட்கிறோம். உங்களால் செய்து தரமுடியவில்லை என்றால், எங்களிடம் கொடுங்கள் நாங்களே செய்து சாப்பிடுகிறோம்.
எங்கள் வீடுகளில் வறுமை இருப்பதால் நாங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறோம். எங்களை குறைவாக நினைக்காதீர்கள், நாங்கள் உங்கள் மடத்தில் வந்து உட்காருவோம். கங்காவதியிலிருந்து அனைத்து மாணவர்களும் வந்தால் உங்கள் மடம் தாங்காது. நாங்கள் வந்தால் உங்கள் மடத்தில் ஒரு அங்குல இடமும் இருக்காது, அவ்வளவு மாணவர்கள் உள்ளனர்” எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.