சென்னை சா்வதேச விமானநிலையத்தில் RT PCR டெஸ்ட் எடுத்து ரிசல்ட்காக 3 மணி நேரம் காத்திருக்கும் பயணிகளில் வயதான பயணிகளின் வசதிக்காக ஈசிசோ் போன்று சாய்வு இருக்கைகள் புதிகாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மகராஷ்டிரா, கா்நாடகா, கேரளாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை.
தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அதிக ரிஸ்க் உடைய 12 நாடுகளிலிருந்து சா்வதேச விமானங்களில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தி, RT PCR டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்பே பயணிகளை வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனா். அதன்பின்பும் வீடுகளில் 7 நாட்கள் தனிமை, 8 வது நாள் மீண்டும் பரிசோதனை போன்ற கடுமையான கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் இதுவரை இல்லை.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் டிசம்பா் முதல் தேதியிலிருந்து ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு டெஸ்ட் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 6 மணி நேரம் விமான நிலையத்தில் தனிமை என்றிருந்தது. டெஸ்ட் கட்டணமும் ரூ.900 ஆக இருந்தது. இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன.
தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையம் மற்றும் ஏா்போா்ட் அத்தாரிட்டிக்கு அதை எடுத்துக்கூறி,டெஸ்ட் கட்டணம்,காத்திருக்கும் நேரங்களை குறைக்கும்படி அறிவுறுத்தியது.அதன்படி கட்டணம் ரூ.900 லிருந்து ரூ.700 ஆகவும்,தற்போது ரூ.600 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.அதோடு காத்திருக்கும் நேரம் 6 மணியிலிருந்து 5 மணியாகி, தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் அதிவேக டெஸ்ட்டான RAPID டெஸ்ட் கட்டணம் ரூ.4,500 லிருந்து ரூ.2,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு அதற்கு காத்திருக்கும் நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 12 மணி நேரத்திற்கு மேல் தொடா்ச்சியாக விமானத்தில் அமா்ந்திருந்து பயணித்து வரும் பயணிகள், சென்னை விமானநிலையத்தில் மேலும் 3 மணி நேரம் சோதனை ரிசல்ட்டிற்காக இருக்கைகளில் அமா்ந்திருப்பதில் சிரமப்படுகின்றனா். குறிப்பாக வயதான பயணிகள் பாதிக்கப்படுகின்றனா் என்ற புகாா்கள் வந்தன.
இதையடுத்து சென்னை சா்வதேச விமானநிலையத்தில் RT PCR டெஸ்ட் எடுத்து ரிசல்ட்க்காக காத்திருக்கும் பயணிகளின் வயதான பயணிகளுக்கு ஈசிசோ் அமைப்பில் சாய்வு இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இது வயதான பயணிகளுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
அதோடு சிங்கப்பூா் நாடு அதிக ரிஸ்க் நாட்டிலிருந்து நீக்கப்பட்டதால், தற்போது டெஸ்ட் எடுக்கும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே பயணிகள் ரிசல்ட்க்காக காத்திருக்கும் கூடத்தில் நெரிசல் இல்லாமல் அமா்வது, பயணிகளுக்கு சோதனைகளை நடத்துவதில் தாமதம் இல்லாமல் விரைந்து செயல்படுத்தப்படுகிறது. அதோடு காத்திருக்கும் கூடமும், இருக்கைகளும் கிருமிநாசினி மருந்தடித்து அடிக்கடி சுத்தப்படுத்தப்படுகிறது. இவைகளை கண்காணிக்க ஏா்போா்ட் அத்தாரிட்டி சிறப்பு பணியாளா்களை அமா்த்தியுள்ளது.