உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதுவரை இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம். பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நீச்சல் குளங்களை மூட வேண்டும் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது