நாட்டின் மொத்த சி.ஜி.எஸ்.டி., எஸ்.ஜி.எஸ்.டி, ஐ.ஜி.எஸ்.டி வசூல் விபரம் குறித்தும் தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்தும் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளில் வசூல் செய்யப்பட்ட சி.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி, ஐ.ஜி.எஸ்.டி விபரம்; தமிழக அரசுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை விவரம்; வரும் காலத்தில் சரியான நேரத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்கிட ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 2019-20 நிதியாண்டில் மொத்தம் 8,53,340 கோடி ரூபாய் வசூலானது. இதில் சி.ஜி.எஸ்.டி. ரூ.2,27,321 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ.3,09,040 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ.3,16,979 கோடி வசூலானது. அதேநேரம் 2020-21 நிதியாண்டில் மொத்தம் 7,83,811 கோடி ரூபாய் வசூலானது. இதில் சி.ஜி.எஸ்.டி ரூ.2,09,786 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.2,72,673 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ.3,01,352 கோடி வசூலானது.
2021-22 நடப்பு நிதியாண்டில் 23 நவம்பர் வரை மொத்தம் 6,32,630 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி ரூ.1,69,943 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.2,18,368 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ.2,44,319 கோடி வசூலானது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு செஸ் தொகையாக 9845.5 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை தரும் அளவுக்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால் ஒன்றிய அரசு 1.1 இலட்சம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 1.59 இலட்சம் கோடி பொருளாதார சந்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி. வாயிலாக கடந்த 2019-20ல் ரூ.68,536 கோடியும் அதில் சி.ஜி.எஸ்.டி ரூ. 19,185 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.27,141 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ.22,210 கோடி வசூலானது. 2020-21ல் ரூ.63,534 கோடியும் அதில் சி.ஜி.எஸ்.டி. ரூ. 17,712கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ.23,870 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ரூ.21,952 கோடி வசூலானது. இந்த நிதியாண்டில் (2021-22) 23 நவம்பர் வரை ரூ.50,588 கோடியும், அதில் சி.ஜி.எஸ்.டி. ரூ.14,108 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.18,966 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. ரூ.17,514 கோடி வசூலாகியுள்ளது.
இக்காலக் கட்டத்தில் தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.1,82,658 கோடி வசூல் ஆகியுள்ளது. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு சி.ஜி.எஸ்.டி. வாயிலாக மொத்தம் ரூ.51,005 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி. வகையில் ரூ.61,676 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
அதேநேரத்தில் தமிழகத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ.6241 கோடி 2021-22 நடப்பு ஆண்டில் ரூ.8095 கோடி வழங்கியதாகவும் இதே காலகட்டத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை முறையே ரூ.2894 கோடி, ரூ.2049 கோடி நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.