வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கனமழை பெய்து வருகிறது.
மேலும் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்தமானில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
அதேபோல், இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து செல்லும்.
இந்த புயல் டிசம்பர் 4ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா பகுதியை நெருங்கும். இதன்காரணமாக இதை ஒட்டிய கடல்பகுதியில் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.