இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்றும், 132% மேல் என்ற அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை அதிகமாகவே பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டித் தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்தில் நீண்ட கால சராசரியை விட கூடுதலாக பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இயல்பாக டிசம்பர் மாதத்தில் 18 செ.மீ மழை பெய்யக்கூடும். தற்போது 132 சதவீதத்திற்கு மேல் என்ற அளவில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய வானிலை நிலவரப்படி கடலின் வெப்பநிலை, IOD எனும் இந்திய பெருங்கடலின் இரு துருவங்களும் தமிழகத்திற்கு மழை தரக்கூடிய சாதகமான நிலையில் உள்ளதால் டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.