தமிழ்நாடு

கிளப்களை கண்காணிக்க CCTV பொருத்தலாம்... ரம்மி விளையாடுவதை தடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

Representational image
Representational image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி-க்கள் பொருத்தலாம் என பரிந்துரைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பான சாதக பாதகங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம்.நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப், சென்னை வடபழனி பைவ் ஸ்டார் கிளப் ஆகியவை தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் பொழுதுபோக்கு கிளப்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிளப்களுக்கு வரும் உறுப்பினர்களில் சிலர் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாகவும், அவர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, மற்ற அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக புகார்கள் வரும் நபர்கள் பொழுதுபோக்கு கிளப்களுக்கு வந்தால், அவர்களை கண்காணிக்க மட்டுமே உள்ளே செல்வதாகவும், அன்றாட நடவடிக்களில் தலையிடும் நோக்கம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு எதிராக புகார்கள் வராத நிலையில் கிளப்களுக்குள் செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கிளப் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும், பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையிலும் கிளப்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அவ்வாறு கிளப்களில் பொருத்தப்படும் சிசிடிவி-க்கள் உறுப்பினர்களின் தனியுரிமையையும், காவல்துறை விசாரணையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டுமெனவும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தகுந்த நபராக தமிழக டி.ஜி.பி இருப்பதால், அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த முடியுமா, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விரிவான ஆய்வுசெய்து உறுதியான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories