தமிழ்நாடு முழுவதும் இன்று 12வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை அடையாறு பகுதியில் உள்ள மலர் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் 50 ஆயிரம் இடங்களில் 12வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் இரண்டு லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு இந்த முகாமில் வைக்கப்பட்டுள்ளது.
அதோபோல் தடுப்பூசி முகாமுடன் சேர்ந்து டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் முதல் தவணையாக 77.33 சதவீதம் நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 42.10 சதவீதம் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கூடங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா, சீனா, போஸ்வானா. ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.