சேலம் மாவட்டம் கருகல்பட்டி பாண்டு ரங்க நாதர் விட்டல் தெருவில் வசித்து வருபவர் கணேசன். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே போன்று கோபி என்பவர் எலக்ட்ரிஷியன் ஆக பணியாற்றி வருகிறார். இருவரது வீடுகளும் அருகே அருகே உள்ள நிலையில் இன்று காலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் இவர்கள் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் இவர்கள் வீடு மட்டுமல்லாமல் அருகே உள்ள தீயணைப்பு அலுவலர் பத்மநாபன் மற்றும் வெங்கட் ராஜன் ஆகியோர் வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
இந்த இடிபாடுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் தீயணைப்பு அலுவலர் பத்மநாபன் மற்றும் அவர் மனைவி லதா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ராஜலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் நகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
மேலும் 2 குழந்தைகள் உட்பட 4 பேரை மீட்கும் பணி 3 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 வயது சிறுமி பூஜா ஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டார் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.