சென்னை பாரிமுனையில் உள்ள மிகப் பழமையான சுரங்கப்பாலம் ரிசர்வ் பேங்க் சுரங்கப்பாலமாகும். இது, வடசென்னை பகுதியை கடற்கரை சாலையுடனும், தென்சென்னை பகுதியுடனும் இணைக்கும் முக்கிய சுரங்கப் பாலமாக அமைந்துள்ளது.
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சுரங்கப்பாலம் வழியாக மணலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மீண்டும் இதே சுரங்கப்பாலம் வழியாக கோட்டைக்கு திரும்பினார்.
அப்பொழுது இந்த சுரங்கப் பாலத்தில் வளர்ந்திருந்த செடிகளையும், ஆங்காங்கே சிறிதளவு மழை நீர் தேங்கி இருப்பதையும் கண்ட முதல்வர் உடனடியாக இதனை சீரமைத்து, புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிட்டார் .
முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுவும் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடியும் இன்று காலை ரிசர்வ் பேங்க் சுரங்கப் பாலத்திற் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு கூறியதாவது,
”தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று இந்த பழமையான சுரங்க பாலத்தை ஆய்வு செய்தோம். இந்த சுரங்க பாலம் பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கொண்டு கட்டுமானத்தை ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து அதனடிப்படையில் இந்த சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த பாலத்தில் மழை நீர் சேகரிக்க 1,20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கிணறுகள் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலையும் ஆய்வு செய்யப்படும். மேலும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணியும் பாதசாரிகள் நடைபாதை , ஆகியவையும் சீரமைக்கப்பட்டு வண்ண விளக்குகள் வடிவமைத்து , மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த பாலம் புதுப்பொலிவுடன் மாற்றும் பணி சென்னை பெருநகர 2.O திட்டத்தின் கீழ் விரைவில் துவங்க உள்ளது.
சென்னை நகரில் கடந்த 40 ஆண்டுகளாக மழைக் காலங்களின் போது இங்குள்ள சுரங்கப் பாலங்களில் நிலை என்ன என்பது குறித்து அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிந்ததுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வடசென்னையில் உள்ள கன்னிகாபுரம் சுரங்க பாலம் மழைக்காலங்களின் போது மழை நீர் தேங்கி ஒருவார காலம் மழை நீர் வடியாமல் இருக்கும் .
ஆனால் தற்போது தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளினால் சென்னை நகரில் மழை பெய்த சில மணி நேரங்களிலேயே சுரங்க பாலங்களில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது .
கடந்த காலங்களில், கடந்த கால ஆட்சியாளர்களால், அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் திட்டமிடப்படாமல், சரியான கட்டமைப்பு இல்லாமல்அமைக்கப்பட்டதன் காரணமாக தான் சென்னையில் தற்பொழுது பெய்த மழைக்கு ஆங்காங்கே மழை நீர் தேங்கியதற்கு காரணமாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சூளை அங்காளம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களால் எந்த பயனும் இல்லாமல் அங்கே மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது .
இந்த மழை நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. தற்பொழுது எங்கெல்லாம் மழை நீர் தேங்கி இருந்ததோ, அங்கெல்லாம் மழைநீர் வடிகால்வாய்க்கள் விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எங்கெல்லாம் மழை நீர் வடிகால் தேவைப்படுகிறதோ அந்த இடங்களையெல்லாம் கண்டறிந்து விரைவில் அங்கெல்லாம் சரியான கட்டமைப்பில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
தற்போது கூட தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி கொளத்தூர் பெரியார் நகர் , நூறடி ரோடு , சூலை புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால்வாய்கள் தூர்வாரும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுபடியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் ஆலோசனைப்படியும் இந்தப் பணிகள் எல்லாம் தொய்வில்லாமல் நடைபெற்று. இனி வரும் மழைக்காலங்களில் சென்னை மாநகரில் மழை நீர் தேங்காத வண்ணம் மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.