சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது அக்கா புவனேஷ்வரி. இவர் பேன்ஸி ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், சந்தோஷ் கடந்த 15ஆம் தேதி கடையில் வேலை பார்க்கும் தனது அக்காவைப் பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இறுதி ஊர்வலம் சென்றது.
அந்த நேரம் சாலையில் சிலர் நாட்டு வெடி வெடித்துள்ளனர். இதில் சாலையோரம் கடை அருகே நின்று கொண்டிருந்த சிறுவனின் கண்ணில் கல் ஒன்று பட்டது. சிறிது நேரத்திலேயே சிறுவனின் கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் சந்தோஷின் இடது கண் பார்வை பறிபோய்விட்டதாகக் கூறினர்.
இதைக்கேட்டு அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீரில் மூழ்கினர். யாரோ செய்த தவறால் தன் தம்பியின் கண் பறிபோய்விட்டது என நாட்டு வெடி வெடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சந்தோஷின் சகோதரி.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த விமலா என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போதுதான் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டு வெடி வெடித்த குணசேகரன், சண்முகவேல், செல்வகுமார் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.