காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியில் உள்ள தனது நண்பரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர், நண்பரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வழியில் நின்றுகொண்டிருந்த மர்ம இளைஞர் ஒருவர் அவரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். பிறகு அந்த இளைஞரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அஜித்குமார் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபிறகு இரண்டு இளைஞர்கள் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
இதனால் அஜித்குமார் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது லிஃப்ட் கேட்டு வந்த நபர் உட்பட மூன்று பேரும் சேர்ந்துகொண்டு அஜித்குமாரை தாக்கினர். பின்னர் GPayயில் இருந்து தங்களது எண்ணுக்குப் பணம் அனுப்பும்படி மிரட்டி ரூ.1300-த்தை மாற்றிக்கொண்டனர்.
பின்னர், அஜித்குமார் அணிந்திருந்த மோதிரம், ஒரு பவுன் செயின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை அந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து அஜித்குமார் ஆவடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அஜித்குமார் செல்போனில் இருந்து GPayயில் பணம் அனுப்பிய எண் மற்றும் வங்கிக்கணக்கை கொண்டு போலிஸார் விசாரணையை துவக்கினர்.
இதில், ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஹரிதாஸ், அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் ஆகிய மூன்று பேர்தான் அஜித்குமாரை தாக்கி பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்து ஏழு மணி நேரத்திலேயே போலிஸார் குற்றவாளிகளை பிடித்து கைது செய்துள்ளனர். போலிஸாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.