கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் வீரா. இவரது மனைவி உமாலட்சுமி. இந்த தம்பதிக்கு சுஷ்மிதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உள்ள உமாலட்சுமியின் தந்தை வீட்டிற்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்தனர். பின்னர் காரில் அங்கிருந்து பெங்களூருவை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து கார் தருமபுரி மாவட்டம், பொன்னேரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. இதனால் முன்னால் சென்ற லாரியில் இருந்து மழை நீர் காரின் கண்ணாடி மீது தெளித்துள்ளது. இதில் வீராவின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரத்தில் இருந்து 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குப்புறக் கவிழ்ந்தது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்குக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் விழும் போது கார் கதவு திறந்து கொண்டதால் உமாலட்சுமி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு போலிஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு கிணற்றிலிருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. இதில் வீராவும் அரவது மகள் சுஷ்மிதாவும் இறந்த நிலையில் சடலமாக இருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் கிணற்றில் பாய்ந்து 6 மணி நேரத்திற்குப்பின் போராடி மீட்கப்பட்டது.