சேலம் மாவட்டம் சங்ககிரியில் இந்தியன் வங்கி ஏ.எடி.எம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த மாதம் 17ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஏ.டி.எம் மையத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், ஜெகதீஸ், முகமது ரியால் ஆகியோர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான பூபாலன், ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, கடந்த 2019ஆம் ஆண்டு ஏழு ஏ.டி.எம் எந்திரங்களில் ரூ.1.32 கோடி பணத்தை நிரப்புவதற்காக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தனது கூட்டாளிகள் ஐந்து பேருடன் சேர்ந்துகொண்டு அந்தப் பணத்துடன் பூபாலன் தலைமறைவானார்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தை ஐந்து பேரும் பிரித்துக் கொண்டு வெவ்வேறு ஊர்களில் பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில் தனது புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து சங்ககிரி ஏ.டி.எம் ஏந்திரத்தில் கொள்ளையடிக்கும்போதுதான் பூபாலன் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.