தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் வேளையில் கடந்த ஓரிரு நட்களாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் மழைநீர் வடிகால் பணிகள் ஏதும் முறையாக நடைபெறததால் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
ஆகையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே களத்தில் இறங்கி ஆய்வுப் பணிகளை முடுக்கிவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.கவினர் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இதனிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சென்னை, டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், “வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச் செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மகளிரணியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நிவாரணப் பணிகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” என தி.மு.க. மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.