திருச்சி மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் திருச்சி பா.ஜ.க மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது பேஸ்புக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து தவறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காளீஸ்வரன் இது குறித்துக் கடந்த மாதம் 19ம் தேதி சைபர் கிரைம் போலிஸில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து காளீஸ்வரன் பேஸ்புக்கை ஹேக் செய்தது திருச்சி கருமண்டபம் விஷ்வாஸ் நகரைச் சேர்ந்த திலகா சிவமூர்த்தி என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்ட பா.ஜ.க விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக திலகா உள்ளார். மேலும் தனது வீட்டையெர்ட்டி காளி கோயில் ஒன்றைக் கட்டி திலகா பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள பெண் நிர்வாகி ஒருவருக்கு மாநில பொறுப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனக்கு டம்மி பதவி கொடுத்துவிட்டு, மற்றொரு பெண்ணுக்கு மாநில பொறுப்பு கிடைத்தால் திலகா ஆத்திரத்திலிருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர் காளீஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் கேசவன், நிர்வாகி தாளக்குடி விஜய் ஆகியோரை பழிவாங்க நினைத்துள்ளார்.
இதையடுத்து மாவட்டச் செயலாளர் காளீஸ்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் பேஸ்புக் கணக்கைப் போலியாக ஒன்றை உருவாக்கி அதில் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று பதிவிட்டு வந்துள்ளார். இதற்கு ரவிக்குமார் என்பவர் உதவி செய்துள்ளார். இதையடுத்து திலகா மற்றும் ரவிக்குமாரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.