தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை 33% ஆக அதிகரிப்பது, பருவநிலை மாற்றத்தை கண்காணித்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற லாப நோக்கமற்ற நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து காலநிலை சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் காடுகள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை சூழியல் ரீதியாக மீட்டெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். மேலும் சதுப்பு நிலங்களை கண்டறிந்து, வரைபடமாக்கி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பசுமை தமிழ்நாடு பணி என்றடிப்படையில் தற்போதுள்ள 23.7 சதவீத காடுகள் பரப்பளவை, 33 சதவீதமாக அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்த மரங்களை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கரியமில வாயுவை குறைப்பது, காலநிலை மாற்றம் மற்றும் தமிழகத்தில் பூஜ்ஜியம் கார்பன் என்ற நிலையை உருவாக்குவது போன்றவற்றை குறிக்கோளாகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் என்ற வீதத்தில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தை பருவ நிலைக்கு ஏற்றார் போல தளங்களுக்கு மாற்றுவதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான மற்றும் மீள் கட்டுமான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கல்வித்துறை தனியார் துறைகள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவதும் உள்ளடக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் என்ற நிறுவனம் தொடங்கப்படுகிறது.
அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 53 சதவீதமாக உயர்த்துவதற்கு திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதை இந்த நிறுவனம் மேற்கொள்ளும். காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகளை உருவாக்குதல் காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதில் உள்ளூர் சமூகங்களுக்கும் அதிகாரம் அளித்தல், சிறந்த நிர்வாகத்திற்கு அதிநவீன கண்காணிப்பு முறைகளை உருவாக்குதல், சர்வதேச நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை ஒருங்கிணைத்தல் போன்றவை இந்த நிறுவனம் மேற்கொள்ளும், என அரசாணையில் தெரிவிக்கபட்டுள்ளது.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் தலைவராகவும், நிதித்துறை, எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாக துறை, விவசாயம் மற்றும் பொதுப்பணி ஆகிய துறை செயலர்கள் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர் இந்த நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார். 51 சதவீதம் பங்குகள் அரசிடமும், 49% தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமும் கொடுக்கப்பட்டு, லாப நோக்கமற்ற நிறுவனமாக செயல்படும், என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.