தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. நேற்று மாலை 4 மணி அளவில் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் திடீரென கன மழை கொட்டி தீர்த்தது இதில் அணைக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணைக்கு வரும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது இதனால் கருப்பாநதி பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் கடையநல்லூர் அருகேயுள்ள கல்லாறு சின்னாறு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளியை முன்னிட்டு காற்றுக்கு குளிக்கச் சென்ற மற்றும் விவசாய பணிக்கு சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர்.
இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பைக்குகளில் சென்றதால் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளநீரால் மறு கரைக்கு வர முடியாமல் தவித்தனர். இதில் கல்லாறு பகுதிகளுக்கு சென்ற கடையநல்லூரை சேர்ந்த 60 நபர்கள் சிக்கிக் கொண்டனர் . கடையநல்லூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தென்காசி காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் படி தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
காட்டாற்று ஓடையில் கூடுதல் நீர் வந்ததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் பெரியாற்று படுகைகளில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காசிதர்மம் கிராமம் வழியாக டிராக்டர் ஜீப்புகளில் அனைவரையும் அழைத்து வந்தனர்.
இதுபோன்று கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பெரியநாயகம் கோவில் பகுதியில் பெரியாற்று படுகையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 3 பெண்கள் உட்பட 20 நபர்களை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை மாவட்ட அலுவலர் கவிதா தலைமையில் நிலை அலுவலர் ரமேஷ் உட்பட தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த அவர்களை கயிறு கட்டி மழையில் நனைந்தபடி இருளில் மீட்டனர் என்பனது குறிப்பிடத்தக்கது.