பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பிரதமர் மோடியின் உருவப்படத்துக்கு மலர்தூவி போராட்டம் நடத்தினர்.
இந்தியா முழுக்க பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி உருவப்படத்துக்கு மலர் தூவும் நூதன போராட்டத்தை த.பெ.தி.க அமைப்பினர் இன்று நடத்தினர்.
கோவை அவிநாசி சாலையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நடந்த போராட்டத்திற்கு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது பெட்ரோல், டீசல் விலையை உலகிலேயே அதிகமாக உயர்த்தி சாதனை படைத்ததாக மோடியின் உருவப்படத்திற்கு மலர்தூவினர்.
த.பெ.தி.க அமைப்பினர், மோடி படத்துக்கு மலர் தூவும் போராட்டத்தை அறிவித்ததுமே, அந்த பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டுள்ளது.
அண்மையில், பெட்ரோல் விலை உயர்வால் தங்களின் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாக பலர் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடும்போது, அங்கிருக்கும் மோடியின் புகைப்படத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவது போன்றும், தரையில் படுத்து கும்பிடுவது போன்றும் புகைப்படம் எடுத்து அதை #ThankYouModiJiChallenge ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போராட்டத்திற்கு முன்னதாக பெட்ரோல் பங்க்கில் இருந்து மோடியின் படம் அகற்றப்பட்டிருப்பது பா.ஜ.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.