மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதற்கு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதுகுறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறும் அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்” என சவால் விடுத்திருந்தார்.
இதையடுத்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்துறை அமைச்சர் ஆதாரம் கேட்கிறார். அவருக்கான ஒரு சாம்பிள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக்கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ.29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. பதில் சொல்லுங்கள்” என ட்வீட் செய்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடி என சரியாக எழுத கூட தெரியாமல். அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.
2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேரவேண்டிய ரூ.15,541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை” எனப் பதிலளித்தார்.
மேலும், “செப் 24 - அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக். 18 அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ. குஜராத் வாங்கியது 45 மி.யூ, மஹாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ. ஹரியானா வாங்கியது 14 மி.யூ. இந்திய மின் சந்தையில் அக் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.” எனச் சாடியிருந்தார்.
மேலும், “1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOனால் 30/3/2012 அன்று LANCO நிறுவனத்திற்கு Original proposal வழங்கி, பின்னர் 27/12/2014 அன்று LoA (Letter of Award) வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 1700 கோடி செலவாகி, குறைந்த பணிகளே முடிந்த நிலையில், LANCO நிறுவனம் insolvency ஆகிறது. As is where is என்ற அடிப்படையில், எடப்பாடி அரசு 2/3/2019 அன்று BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 1/3/2021 அன்று CTE (Content to Establish) கொடுக்கிறது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல், அந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறது.
BGR நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது. இது புது ஒப்பந்தமில்லை. பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கூட்டணியாய் இருந்தபோதே நிகழ்ந்த ஒப்பந்தம். ஒப்பந்த தொகையும் எடப்பாடி அரசு நிர்ணயம் செய்ததே. முழுக்க அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிகழ்வுகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, பணி ஆரம்பிக்கப்பட்ட பின், மேலும் காலம் தாழ்த்தாமல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.