பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத் தடையை மறுபரிசீலனை செய்திடுமாறு நான்கு மாநில முதல்வர்களுக்கு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததறிவோம்!
தமிழக முதல்வர் அவர்களின் இந்த வேண்டுகோளையேற்று, பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இராஜஸ்தான் மாநில முதல்வர் விலக்கிக் கொண்டதற்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:- “பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத்தடையை மறுபரிசீலனை செய்திடுவீர்!” என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று பகலில், புதுடெல்லி - ஒரிசா - ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய 4 மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதினார்.
முதல்வர் அவர்களின் இந்த முன்னெடுப்பின் விளைவாகவும் - தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளை ஏற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட், சிவகாசி பசுமைப் பட்டாசுகளை இராஜஸ்தான் மாநிலத்தில் வெடிப்பதற்கு இருந்த தடையைநீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இச்செய்தியறிந்து மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று இரவு விடுத்த அறிக்கையொன்றில், இராஜஸ்தான் முதலமைச்சருக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கைவருமாறு :-
நான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்திற்கு இப்பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கக்கூடிய இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் உங்கள் கனிவுமிகு நடவடிக்கை ஒளியேற்றும். இவ்வாறு அப்பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.