தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அதிக இடங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக மொத்தம் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க கூட்டணி 138 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் 1381 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்களுள், 1021 இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 13 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் 3வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
எம்.எஸ்.சி., எம்.ஃபில் மற்றும் எம்.எட் பட்டங்களைப் பெற்றவர் பிரியதர்ஷினி. இவரது கணவர் ஞானவேலன், ஆலங்காயம் தி.மு.க ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
பிரியதர்ஷினி பெற்ற மொத்த வாக்குகள் 33,844. இதில் பா.ஜ.க வேட்பாளர் வளர்மதி 5,455 வாக்குகளை மட்டுமே பெற்றார். இவரைக் காட்டிலும் சுமார் 28,386 வாக்குகள் கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளார் பிரியதர்ஷினி.
அதுமட்டுமல்லாது, 9 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றவர் பிரியதர்ஷினிதான். இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் பிரியதர்ஷினி திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மிகஅதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்ற பிரியதர்ஷினிக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.