நெல்லை மாவட்டம் வள்ளியூர், சங்கனாபுரம் வாக்குச் சாவடியில் 88 வயது மூதாட்டியின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவிய உதவி ஆய்வாளர் சையத் நிஸாரை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 567 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சங்கனாபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி சங்கரம்மாள் (88) வாக்குச்சாவடிக்கு கையில் தடியுடன் நடக்க முடியாமல் நடந்து வாக்களிக்க வந்துள்ளார்.
இதைக் கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சையத் நிஸார் அகமது, அம்மூதாட்டியை தோளில் சுமந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்தார்.
காவல் உதவி ஆய்வாளரின் இந்தச் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளரை தமிழக காவல்துறையின் உளவுத்துறை எஸ்.பி சரவணன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.