திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே தசைநார் நரம்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து அரசு மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கொண்டையம்பள்ளியைச் சேர்ந்தவர் விஜய் பாண்டியன். கடந்த 2 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவருக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தையல் போட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவரது விரல் 2 மாதங்களாக நீட்ட முடியாமல் மடங்கியே இருந்துள்ளது.
இதையடுத்து, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத்திடம் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது, அவரது விரலின் தசைநாண் நரம்பு முற்றிலும் சிதைந்துபோனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு ஒட்டுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, முன் கையின் நடுப்பகுதியில் உள்ள தசைநாண் நரம்பின் ஒரு பகுதியை எடுத்து சிதைந்துபோன நரம்பிற்கு மாற்றாக வெற்றிகரமாகப் பொருத்தினர்.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட விஜய் பாண்டியனின் விரல் இயல்பு நிலைக்கு வர 6 முதல் 12 வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் வலது கை மட்டும் மரத்துப் போகும் வகையில் மருந்து செலுத்தப்பட்டது. இதனால் அவர் சுய நினைவுடன் செல்போனில் ‘கத்தி’ திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். மேலும், உறவினர்களுடன் செல்போனில் பேசி ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்துள்ளார்.
டெண்டான் ப்ரிகிராஃப்ட் மற்றும் ரீகன்ஸ்ட்ரக்ஷன் என்ற நவீன முறையில் மேற்கொள்ளப்படும் இந்த தசைநாண் நரம்பு மாற்று ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, சாதாரண துணை மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.