புதுகோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி ஐயப்பனை நிறுத்தி வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
இதையடுத்து ரவுடி ஐயப்பன் சிகரெட் புகையை காவலர்கள் முகத்தில் ஊதி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியுள்ளார். மேலும் உதவி ஆய்வாளர் கணேசனின் கன்னத்தில் அறைந்தது மட்டுமல்லாமல், வாகனத்திலிருந்து பீர் பாட்டிலை எடுத்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து ஐயப்பன் மீது காவலர் கொடுத்த புகாரின் பெயரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதுகுறித்தான வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், "332வது சட்டப்பிரிவின்படி 5 ஆண்ட கடுங்காவல் தண்டனையும், 307வது சட்டப்பிரிவின் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் செலுத்துவதோடு, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்துள்ளார்.