திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் அலமேலு. மூதாட்டியான இவர் கடந்த 25ம் தேதி மேல்மருத்தூர் செல்வதற்காக வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்தவர்கள் மூதாட்டியிடம் மேல் மருவத்தூரில் விட்டு விடுவதாகக் கூறி காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் காரில் செல்லும் போது மூதாட்டிக்குக் குளிர்பானம் கொடுத்துள்ளனர். இதைக் குடித்த மூதாட்டி சிறிது நேரத்திலேயே மயங்கியுள்ளார். பிறகு காரில் இருந்த மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 6சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மூதாட்டியை பெரிய பாளையம் அருகே சாலையோரம் யாருக்கும் தெரியாத படி போர்வை போர்த்திப் படுக்கவைத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இரண்டு நாட்கள் மயக்கம் தெளித்து எழுந்த மூதாட்டி சாலையோரத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு இது குறித்து காவல்நிலையத்தில் மூதாட்டி அலமேலு புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டியை காரில் ஏற்றின் சென்றவர்களின் அடையாளங்கள் போலிஸாருக்கு தெரிந்தது.
இதையடுத்து மூதாட்டியை காரில் ஏற்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 6 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த தந்தை,மகன் உட்பட மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.