தமிழ்நாடு

“விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” : நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

“விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு” : நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை பதிவு செய்தார்.

தலைவராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2021 பிப்ரவரி 28ஆம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories