தமிழ்நாடு

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆஜராகாமல் ஜகா வாங்கும் ராஜேஷ்தாஸ்: நீதிபதி காட்டம்!

வாதாட கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆஜராகாமல் ஜகா வாங்கும் ராஜேஷ்தாஸ்: நீதிபதி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தாக்கல் செய்தனர். 

இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் நேரில் ஆஜரானார். மேலும் இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பில் வாதாட கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதனால் கோபம் அடைந்த நீதிபதி கோபிநாதன், முன்னாள் எஸ்.பி கண்ணன் தரப்பு மற்றும் அரசு தரப்பு என இருத்தரப்பு வாதாடிவிட்ட போதிலும் நீங்கள் மட்டும் கால அவகாசம் கேட்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும் என தெரிவித்து கால அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் கண்டிப்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும் என உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories