தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கொள்கை விளக்கத்தையும், ஏற்றுமதி மேம்பாட்டுக்கு குழு அமைத்திருப்பதையும் வரவேற்பதாக கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி என்பது ஏற்றுமதி மேம்படுத்தப்படுவதை பொறுத்துதான் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
தமிழக அரசு தேவைகளை கண்டறிந்து ஊக்கத்தை கொடுத்தால் இன்னும் பலமடங்கு ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கின்றன. அதன் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை தமிழக முழுவதும் உருவாக்க முடியும்.
லட்சக்கணக்கான படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க முடியும். தமிழகத்தின் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம் என்ற தமிழக முதலமைச்சருடைய நம்பிக்கையான வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படும். இதை முழுமையாக உள்வாங்கி அதன் அடிப்படையில் ஏற்றுமதிக்கான தமிழக அரசினுடைய கொள்கை நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான மேம்பாட்டுக் குழு ஒன்றும் நேற்றே அமைக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஏற்றுமதி கொள்கையும், முதலமைச்சர் அவர்களின் பேச்சும் தொழில்துறையினருக்கும், வேலையில்லாத இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் அனைத்து தொழில் அமைப்புகளும் இந்த முயற்சியை வரவேற்று இருக்கிறார்கள். முதலமைச்சர் கனவு கண்ட தமிழகத்தை நனவாக்குவதற்கான ஏறுகின்ற ஏணிப் படிகளாக நாங்கள் இதை பார்க்கின்றோம்.
தொழில்துறையிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக வர வேண்டுமென்ற முதலமைச்சரின் முனைப்பை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வரவேற்கின்றோம். முதலமைச்சரின் எண்ணங்களை திட்டங்களாக வடிவமைத்து தமிழகத்தை முன்னேற்றுவதற்கு முன்னெடுப்பை நடத்தி இருக்கின்ற தொழில்துறை அமைச்சர் அவர்களை நெஞ்சார பாராட்டுகின்றோம்.
ஏற்றுமதியாளர்களின் தேவைகளை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து ஏற்றுமதி கொள்கையில் திட்டமிட்டிருப்பதை வரவேற்கின்றோம். இந்த நேரத்தில் கீழ்கண்ட வளர்ச்சி கோரிக்கைகளையும் தமிழக தொழில்துறைக்கு வைத்துக்கொள்ள விரும்புகின்றோம்.
1. இந்த காலகட்டத்தில் தனியார் பங்களிப்புடன் மூன்று பொதுத்துறை நிறுவனங்களையாவது அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
2. காற்றாலை மின்சாரம், சூரிய மின்சாரம் போன்றவற்றை 24 மணி நேரமும் கிடைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
3. சென்னை துறைமுக விரிவாக்கம், சென்னை இரண்டாம் விமான நிலையம், கோவை விமான நிலைய விரிவாக்கம் அவசியமாக செயல்படுத்தப்பட வேண்டும்.
4. தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்து நடுக்கடலில் கலப்பதற்கான திட்டங்களை குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களை போல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
5. 10 முக்கியமான துறைகளை தேர்ந்தெடுத்து அந்தந்த துறையில் சிறப்பாக தொழில் செய்கின்ற நல்ல அனுபவம் கொண்ட 5 பேரை அத்துறையின் ஏற்றுமதிக்கான ஆலோசனை வழங்க அமைக்க வேண்டும்.
6. பள்ளி படிப்பை கைவிடுகின்ற மாணவர்கள் தொழிற்பயிற்சியை பெறுவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இரண்டு இடங்களிலாவது தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களை (ITI) ஏற்படுத்த வேண்டும்.
7. ஏற்றுமதியை முடக்கி போட்டு இருக்கின்ற கன்டெய்னர் பற்றாக்குறையை தீர்க்க அதன் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
8. கல்லூரிகளில் ஏற்றுமதி தொழில் சம்பந்தப்பட்ட கல்வி பிரிவை துவங்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.