வேளாண் விரோத சட்டம், பெட்ரொல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசின் மக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு.வி.க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு, உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,
நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதும் போராடி இருக்கிறோம், இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடுகிறோம். எங்கள் போராட்டம் மக்களுக்கானது. வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தொடர்ச்சியாக ஒன்றிய அரசு செய்து வருகிறது, உடனடியாக இதை அரசு கைவிட வேண்டும். பாஜகவின் பாசிச ஆட்சியை எதிர்த்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் திமுக படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், மகளிருக்கான இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய், பெட்ரோல் மீது மூன்று ரூபாய் கலால் வரி குறைக்கப்பட்டது உட்பட அதன் தொடர்ச்சியாக திமுக அறிக்கையில் கூறிய கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.