ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் 8வது வரிசையில் அமர்ந்திருந்தது தொடர்பான உண்மையான விவரம் வெளியாகியுள்ளது.
நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில், அ.தி.மு.க சார்பில் கலந்துகொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் படத்தை பா.ஜ.க ஆதரவாளர் சுமந்த் ராமன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தி.மு.க அரசின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஆளுநர் மாளிகையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவருக்கு எட்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி, அந்த வரிசையில் சென்று அமர்ந்தார்.
ஆளுநர் மாளிகை ஊழியர், எடப்பாடி பழனிசாமியிடம் சென்று, “ஐயா.. நீங்க முன்வரிசைக்கு வாங்க.. உங்களுக்கு இருக்கை போட்டிருக்கோம்” என பலமுறை அழைத்தும், எடப்பாடி பழனிசாமி அங்கேயே அமர்ந்திருந்தார்.
இதைக் கவனித்த தி.மு.க எம்.பி கனிமொழி, எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆகியோரிடம் தனித்தனியாகச் சென்று, “முன்வரிசையில் அமருங்கள்” எனக் கூறியபோதும் மறுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ப்ரோட்டோகால் படியே அமைச்சர்களுக்கு அடுத்து எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே எம்.பி, எம்.எல்.ஏக்கள் அமர்ந்திருந்தனர்.
எனினும், மரியாதை கருதி முன்வரிசையில் அமரச் சொல்லி தி.மு.க எம்.பி கனிமொழி வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி நகராத நிலையில், அந்தப் புகைப்படத்தை வைத்து தி.மு.க அரசை சிலர் விமர்சித்து வருவது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.