தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் மதுபானங்கள் சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே டாஸ்மாக் விற்பனை 200 கோடியை எட்டும். இப்படி தமிழகத்தின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே டாஸ்மாக் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
2010-11ல் ரூ.3.56 கோடி , 2011-12ல் ரூ.1.12 கோடி, 2012-13ல் ரூ.103.64, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20ல் ரூ.64.44 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துகிடந்த நிலையில், டாஸ்மாக்கிலும் பெரும் முறைகேடுகள் நடந்ததன் காரணமாகவே டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக கணக்கு காட்டப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.