திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம் (43). இவர் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளராக செயல்பட்டவர். வெள்ளியன்று இரவு தமது மகனுடன் பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல், வசீமை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததோடு, தலையை துண்டித்தனர். பின்னர் அந்த கும்பல் எந்த அச்சமுமின்றி சர்வசாதரணமாக கத்தியை சுழற்றிக் கொண்டே அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வசீம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வசீம் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, திருப்பத்தூர், வாணியம்பாடி சாலையில் அவரது உறவினர்களும், பொதுமக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி, அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி, முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகியோருக்கு வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.