கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படமால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் தடை நீட்டிக்கப்படுகிறது.
பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது. கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.